பாஜக, அதிமுக அரசை தூக்கி எறிய வேண்டும் – கனிமொழி

120

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியையும், அவர்களுக்கு காவடி தூக்கும் தமிழக அரசையும் தூக்கி எறிய வேண்டுமென திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு விழாக் குழு சார்பில் பெரியாரின் 140ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் பறை இசை, சமுதாய விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்நிகழ்வில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், இயக்குநர் ஞானராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய கனிமொழி, பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரச்சனைகள் தலை தூக்கும் என்றார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவையும், அவர்களுக்கு காவடி தூக்கும் அதிமுக அரசையும் தூக்கி எறிந்தால்தான் பெரியார் கண்ட கனவு நிறைவேறும் என தெரிவித்தார்.