தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி ?

287

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார். தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை உணர்ந்து மத்திய அரசு செயல்படவேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என்றால் யார் சுட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். இதேபோன்று, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை சுட்டுக்கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு யார் வழங்கியது என அதிமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியம் வினவினார். தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அக்பர், மீனவர் பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு உறுதியளித்ததாக கூறினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது துரதிஷ்டவசமானது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.