ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு. தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, சென்னை குடிநீர் தேவைக்காக சந்திரபாபு நாயுடு நடவடிக்கை.

115

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மழையின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டேலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அணையிலிருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.