தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக பெய்த கனமழை..!

507

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாமரைக்குளம் மற்றும் நல்லாறு நீர்வழிப்பாதைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டில் உள்ள பொருட்கள், வாகனங்களை மூழ்கடித்தது.

கும்பகோணத்தில் 2 மணிநேரம் பெய்த மழையால், பாணாதுறை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கனமழை காரணமாக, கட்டிடம் ஒன்றும் இடிந்து விழுந்தது. நகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரமாக கொட்டிய கனமழையால், ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.

இதே போல் கூடலூரிலும் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேடுபகுதிகளில் உள்ள மரங்களும், ராட்சத பாறைகளும் சரிந்து விழுந்தன. மண் சரிவால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.