டெல்லியில் முகாமிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக டெல்லிக்கு சென்றுள்ள கமல்ஹாசன், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தார். இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை, கமல்ஹாசன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் விவாத பொருளாகியுள்ளது.