திட்டமிட்டபடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் கமல் ஈடுபடுவார் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

200

தேர்தல் பிரசாரத்தின்போது இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது பிரசாரம் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஓட்டப் பிடாரம் தொகுதியில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி, கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்வார் என மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், தற்போது கொடைக்கானலில் தங்கியிருக்கும் கமல்ஹாசன், இன்று மாலை 4 மணி முதல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.