கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு..!

262

கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், குறுவை சாகுபடிக்கு தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். காவிரி பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராக இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.

காவிரி பிரச்சினைக்கு நீதிமன்ற உத்தரவை விட இருமாநில பேச்சுவார்த்தையே நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், பெங்களூரு சென்ற அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

காவிரி நீர் இரு மாநில விவசாயிகளுக்கும் அவசியம் என்று கூறிய குமாரசாமி, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவிரி இல்லா விட்டால் இருமாநில விவசாயிகளும் இருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டியது அவசியம் எனக் கேட்டுக் கொண்டார். குறைவை சாகுபடிக்கு தண்ணீர் தருமாறு குமாரசாமியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.