திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் உற்சாகம்..!

186

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

5 முறை தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி பல்வேறு சமயங்களில் தேசிய அரசியலின் ஓட்டத்தையும் தீர்மானித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்விலிருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென இரத்த அழுத்தம் குறைந்ததால் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வபோது காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையிலும் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதேபோல் கவிஞர் வைரமுத்து, டிடிவி.தினகரன் போன்றோரும் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துக்கொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு கூடி வருவதால் அவர்களை கட்டுப்படுத்த கூடுதல் தடுப்புகளை போலீஸார் அமைத்துள்ளனர்.