கலைஞர் கருணாநிதியின் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்…

401

ஓய்வறியா சூரியன் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சந்தன பேழையில் வைக்கப்பட்ட மறைந்த கருணாநிதியின் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, ராஜாஜி அரங்கத்தில் இருந்து அண்ணா நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்களும், திமுக தொண்டர்களும் சாலையின் இருபுறங்களிலும் நின்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்தில் கருணாநிதியின் சாதனைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பிரமாண்ட பாதகையை திமுக தொண்டர்கள் ஏந்தி சென்றனர். அப்போது, வாழ்க வாழ்க கலைஞர் புகழ் வாழ்க என்று திமுக உடன் பிறப்புகள் கண்ணீர் மல்க முழக்கமிட்டனர். இறுதி ஊர்வல வாகனம் வழிநெடுங்கிலும் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே ஊர்ந்து சென்றது.

மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு எடுத்து வரப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆளுநர் பன்வாரிலால் ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் சந்தன பேழையில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கில் குலாம் நபி ஆசாத், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வீரப்ப மொய்லி, பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ, திருமாளவன், திருநாவுக்கரசர், வைரமுத்து மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.