பிரதமர் மோடிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.

172

தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடவேண்டும் என பிரதமர் மோடிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நிலவும் வறட்சியால் வாடிய பயிர்களை தாங்கிக்கொள்ள முடியாமல் 106 விவசாயிகள் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடக அரசு மட்டுமின்றி இயற்கையும் துரோகம் செய்ததால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான பாதிப்புக்களை தமிழகம் எதிர்கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.