காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம்: தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தம்!

254

தூத்துக்குடி,ஜூலை.24–
காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால் தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், காற்றாலை மூலம் அதிகளவு மின்சாரம் கிடைப்பதால் கடந்த 20-ஆம் தேதி முதல் 3-ஆவது அலகிலும், 22-ஆம் தேதி முதல் 2-ஆவது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 1-ஆவது அலகில் நேற்று அதிகாலை எண்ணெய்க் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதுதவிர, 4 மற்றும் 5-ஆவது அலகில் வழக்கம்போல மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி இரண்டு அலகிலும் சேர்த்து 390 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1 முதல் 3-ஆவது அலகு வரை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.