காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

224

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தோப்வான் காட்டு பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது,பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவேறு இடங்களில் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, வேறு யாராவது அந்த பகுதியில் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஹந்த்வாரா பகுதியில் பதுங்கியிருந்த மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் 7 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.