திட்டமிட்டப்படி நாளை காலா திரைப்படம் வெளியாகிறது. திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை திரைக்கு வர உள்ள காலா படத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார். படத்தின் தலைப்பு மற்றும் கதை தன்னுடையது என மனுவில் ராஜசேகரன் கூறியிருந்தார். சோழர் சாம்ராஜ்யத்தை மையப்படுத்தி கரிகாலன் என்ற பெயரில் தயார் செய்யப்பட்ட கதையே, காலா என்ற பெயரில் படமாக்கியுள்ளதாக, அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தநிலையில், மக்கள் திரைப்படத்தை காண ஆவலோடு இருக்கும்போது ஏன் தடைவிதிக்க வேண்டும் என, நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் படம் நாளை வெளியாக உள்ளநிலையில், தடை விதிக்க முடியாது என்றும், இந்த வழக்கு மறுவிசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே எவ்வித தடையுமின்றி காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 130 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தகசபை உட்பட பல்வேறு தரப்பினரும், கர்நாடகாவில் வெளியாகியுள்ள காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.