உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பதிலளிக்க வேண்டும் : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

318

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராஜ்பவனில் மரபு ரீதியை பின்பற்றாமல் முதலில் அமைச்சர்கள், பின் காவல்துறையினர் அதற்கு பின்னரே உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கியது தவறு என குறிப்பிட்டுள்ளார். மருத்துவரே முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற ஆங்கில பழமொழியை சுட்டிக் காட்டியுள்ள கி.வீரமணி, மற்ற அலுவலகங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுகள் நடத்துவதைவிட முதலில் நீதிபதிகளை அவமதிக்கும் முறைகேடுகள் ஏன் ஏற்பட்டது என்று ஆய்வு செய்து தவறுக்கு நீதிபதிகளிடம் வருத்தம் தெரிவிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

ராஜ்பவனில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை நீதியரசியின் பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் அவமதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதற்கான விளக்கத்தை ஆளுநர் மாளிகை தருவதுடன் காரணமானவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.