உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு | நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க ஊடகங்களுக்கு வேண்டுகோள்

272

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் உதவியாளராகப் பணியாற்றிய பெண், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியிருந்தார். இது தொடர்பாக 4ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. நீதித்துறையின் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ரஞ்சன் கோகோய், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனத் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரச் செயல்பாடு தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறையைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதேநேரத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்கும் வகையில் ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.