ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் தங்களை அவமரியாதை செய்துவிட்டதாக நீதிபதிகள் புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், புரோட்டாக்கால் விதிமுறையை மீறி நீதிபதிகளுக்கு 5வது வரிசை ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பின்னால் உள்ள வரிசைகள் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நீதிபதி எம்.எஸ். ரமேஷ், அரசியலமைப்பு படிநிலை குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு தெரியாதா எனவும், அமைச்சர்கள், காவல் அதிகாரிகளைவிட நீதிபதிகள் கீழானவர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்கு நீதிமன்ற பதிவாளரை அனுமதிக்காத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது அரசு தலைமை வழக்குரைஞரிடம் நீதிபதிகள் புகார் தெரிவித்துள்ளனர்.