ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படும் – தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

214

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளுக்கு உட்பட்டே மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டு வருவதாக வாதாடினார். நினைவிடம் அமைக்கும் வரைபடம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மெரினா கடற்கரையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

மெரினாவில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது என்பதே தனிப்பட்ட கருத்து என குறிப்பிட்ட அவர், நினைவிடம் தொடர்பான வழக்கில் வாதங்களை பொறுத்தே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை என்றாலும், சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.