பத்மநாபசாமி கோவில் நகைகளை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்தலாமா? – திருவிதாங்கூர் மன்னர் விளக்கம்

264

பத்மநாபசாமி கோவில் நகைகளை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் பதிலளித்துள்ளார்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோவில், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் உள்ள பாதாள அறைகளில், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் என ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளது. இந்தநிலையில், கேரளாவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த நிலையிலும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனர்.

உருகுலைந்து காணப்படும் கேரளாவின் கட்டமைப்புகளை மீண்டும் புதுப்பிக்க, பத்மநாபசாமி கோவில் உள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷயங்களை பயன்படுத்தலாம் என மக்கள் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திருவிதாங்கூர் மன்னர் ஆதித்ய வர்மா, மாநிலத்தில் மிகவும் மோசமான நிலை இருந்தபோதிலும், கோவிலில் உள்ள பொக்கிஷங்களை நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.