ரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம்..!

249

ரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு, வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ரூபாய் நோட்டுக்களில் உள்ள அழுக்குகளால் சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உண்மையானது என்றால், அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள் வர்த்தக துறையிலேயே புழங்குவதால் வர்த்தகர்கள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து இந்திய மருத்துவக் கழகம் ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வர்த்தகர்கள் கூட்டமைப்பு, ரூபாய் நோட்டுக்களால் பரவும் தொற்றுநோய்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.