ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்…

172

ஆந்திரா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் வருகிற 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க, டெல்லி விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் இல்லத்திற்கு சென்ற ஜெகன், மோடியை சந்தித்து பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆந்திராவிற்கான சிறப்பு அந்தஸ்து, அடிப்படை பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறும், பிரதமர் மோடிக்கு ஜெகன் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பில் விஜய் சாய் ரெட்டி உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.