ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை..!

94

ஆந்திராவில் எதிர்க்கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தரெட்டி கடப்பாவில் உள்ள தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விவேகானந்த ரெட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்த ரெட்டி உடலில் 7 இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே போலீசார் 5 சிறப்புப் படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவில் அரசியல், செல்வாக்கு, பணபலம் கொண்ட முக்கியப் பிரமுகர் தேர்தல் நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.