உடல்நிலைக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.

876

உடல்நிலைக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று(05-12-2016) இரவு 11.30க்கு காலமானார். அவருக்கு வயது 68.
நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தநிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இன்று அதிகாலை, சிறிய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எக்மோ கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதை அப்போலோ நிர்வாகமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவும் உறுதி செய்தனர். இந்தநிலையில், இன்று சிகிச்சை பலனின்றி முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. முதலமைச்சர் காலமான செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க கதறி அழுத காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. முதலமைச்சரின் மறைவு செய்தி தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் காணப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க, துணை ராணுவம் படையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.