ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி

182

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணியில் 10 பகுதி வேலைகளில் 8 பகுதி வேலைகள் ஓரளவு முடிந்துள்ளது. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்துமிடம் பணிகளும் முடிவடைந்துள்ளன. அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மெயின் கட்டடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டெக்சருடன் கூடிய வடிவமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி. நிபுணர்கள் செய்து கொடுத்த வடிவமைப்புபடி கட்டுமான பணிகள் அவர்களது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால் கட்டிட கலை நிபுணர்களும் அவ்வப்போது வந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டு வருவதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போதுஅவர் , ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என உறுதியளித்தார். மேலும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.