ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு..!

205

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் 29ஆம் தேதி ஆய்வு செய்யப்படும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் இன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போலோவில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறை, சசிகலா, அமைச்சர்கள், மருத்துவர்கள் தங்கியிருந்த அறைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிரிவு, தீவிர இதய நோய் சிகிச்சை பிரிவு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது இருந்த அறை, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்து ஜெயலலிதாவை பார்த்ததாக சொல்லப்படும் அறை, மருத்துவமனையின் இரண்டாம் தளம், ஜெயலலிதாவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட அறை, அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றுடன் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்ட அறை, அவருக்கு உணவு சமைத்து கொடுக்கப்பட்ட அறை ஆகியவையும் ஆய்வில் உட்படுத்தப்பட உள்ளன.

அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் ஆய்வின்போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் 2 பேர் உடன் இருப்பார்கள் எனவும், ஆய்வு முடிந்த பிறகு, ஜெ. தீபா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.