உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்கு வாரி வழங்கியவர் ஜெயலலிதா.

317

உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்கு வாரி வழங்கியவர் ஜெயலலிதா. அவர் முதலமைச்சராக இருந்த போது அவர் செயல்படுத்திய திட்டங்களை இப்போது காண்போம்
1991-ம் ஆண்டு 11வது முதலமைச்சராக ஜெயலலிதா 43 வயதில் முதல் முறையாக பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் செயல்படுத்திய திட்டங்கள் இந்தியா முழுவதும் பெயர் சொல்ல வைத்தன. குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தையை பாதுகாத்து, பராமரித்து ஆளாக்கும் போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

காவல் நிலையங்களில் பெண்கள் துணிவுடன் வந்து புகார் தரும் வகையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அமைத்தவர் ஜெயலலிதா.

அவரது பெயர் சொல்லும் மற்றொரு முக்கிய திட்டம் மழை நீர் சேகரிப்புத் திட்டம். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை சமாளிக்க, மழை நீரை சேமிப்பதைக் கட்டாயமாக்கினார். இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் வரவேற்று பாராட்டின.

பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை பல மடங்காக பெருக்கியது ஜெயலலிதாவின் மற்றொரு பாராட்டத்தக்க திட்டம்.

பேருந்து வசதியில்லாத அல்லது நீண்ட தூரம் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அமல்படுத்தினார். இந்த திட்டம் உத்தரபிரதேச மாநிலம் தற்போது அமல்படுத்தி உள்ளது.

திருமண வயதில் இருந்தும், வசதியின்மையால் மணமுடிக்க இயலாத ஏழை இளம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்

ஏழைகள் பயன்பெறும் வகையில் ரேஷனில் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று விலை குறைப்பு செய்த ஜெயலலிதா, அதன் பிறகு முற்றிலும் இலவசமாக்கி, குடும்ப அட்டைக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தினார். மானிய விலையில், சமையல் எண்ணெய், பருப்பு வகைகளையும் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.

எம்.ஜி.ஆரால் அறிமுகமான சத்துணவு திட்டத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, சத்துணவுடன் சத்து உருண்டை, பயறு வகைகள், பழங்கள் வழங்கச் செய்தார். மதிய உணவிலும் முட்டை, கலந்த சாத வகைகள் என பல மாற்றங்களைச் செய்தார்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஜெயலலிதா, அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி என கல்விக்கான அனைத்தையும் இலவசமாக்கினார்.

கோயில்களில் குறைந்தபட்சம் ஒரு கால பூஜை நடைபெறுவதை உறுதி செய்த ஜெயலலிதா, பெரிய கோயில்களில் அன்னதான திட்டத்தையும் அமல்படுத்தினார். அடுத்தடுத்த ஆட்சிகளில் அன்னதானம் வழங்கும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளின் எண்ணிக்கையையும் அவர் அதிகரித்து வந்தார்.

பசிப் பிணியை அறவே அகற்றும் நோக்கத்தில், ஏழைகளுக்கென மலிவு விலை உணவுகளை வழங்கும் அம்மா உணவகங்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் மற்றும் இலவச கான்கிரீட் வீடுகள் ஆகியவை அடுத்தடுத்த அம்மா திட்டங்களாகும். ஏழை மக்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்

ஏழை கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு திட்டம், பிரசவ கால நிதியுதவி மற்றும் மகப்பேறு பெறும்போது தாய்க்கும், சேய்க்கும் சஞ்சீவி மருந்து உள்ளிட்ட 16 விதமான இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டமும், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது.

இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றுடன் படிப்படியாக பூரண மதுவிலக்குத் திட்டம், இலவச கைபேசி வழங்கும் திட்டம், 50 சதவிகித மானியத்தில் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் என ஜெயலலிதாவின் மக்கள்நலத் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அவருடைய திட்டங்கள் என்றென்றும் அவரது புகழை பறைசாற்றும்.