எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

302

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை துணைமுதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றும், விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைப்பது தொடர்பாக, தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுனர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறிய அவர், 7 பேரையும் விடுவிப்பதை எதிர்க்கக்கூடாது என காங்கிரசை திமுக நிர்ப்பந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக, காங்கிரசை ஸ்டாலின் வலியுறுத்துவாரா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு பாதி குறைத்தாலே விலை குறையும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து எரிபொருள் விலை ஏறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். மாநில அரசுக்கு மிக குறைந்த அளவே வருவாய் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து இன்னும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரவேண்டும் என்று தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து நிலுவைத்தொகை வந்துவிட்டால், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.