ஜெயலலிதாவிற்கு, தமிழகம் எங்கும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

330

ஜெயலலிதாவிற்கு, தமிழகம் எங்கும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் 3 நாட்களுக்கு பின்னர் இன்று செயல்பட தொடங்கின. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் மாவட்ட கல்விதுறை அதிகாரி சுவாமிநாதன் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள சி.எம் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் திருச்சிற்றம்பலம் தலைமையில் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அதிகாரி திருப்பா நடராஜன் கலந்து கொண்டார். இலவச பாடப்புத்தகம், சைக்கிள், காலணிகள், மடிகணிணி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் உள்ள துனிவணிகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ராஜாஜி நினைவு ராணிமங்கம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து 2 நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செய்தனர்.