தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

230

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரத்தில் 7 காங்கேயம் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசர சட்டம் இயற்றக் கோரி காளைகளுடன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடையாக இருக்கும் மத்திய அரசையும், பீட்டா அமைப்பையும் கண்டித்து பலத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கும்பகோணத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மீன்சந்தை பகுதியில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் எழுப்பப்பட்டன. இதனால் தஞ்சை – மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து முடங்கியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வலியுறுத்தி முறையான சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தேனியில் தமிழக பண்பாடு கலாச்சார மீட்புக்குழு சார்பாக ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பீட்டா அமைப்பையும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உசிலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர் ஐந்து கிலோ மீட்டர் நடை பேரணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சமூக வலைதள அறிவிப்பின் மூலம் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி முன்பாக கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து செங்கல்பட்டு-மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலையில் மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.