ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் கண்டன பேரணி…. காளைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு

225

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கோரி அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டனர். வாடிவாசலிருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடியே
சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, திடீரென இளைஞர்கள் சிலர் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இளைஞர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதையடுத்து, தறிகெட்டு ஓடிய காளைகளை காவல்துறையினர் பிடித்து சென்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அலங்காநல்லூர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.