ஜல்லிக்கட்டை சுமூகமாக நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

171

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 16 பேர் கொண்ட குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனிடையே, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் விழா குழுவில் பிரிவினை ஏற்பட்டதால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆதிகேசவலு அமர்வு அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 16 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அறிவித்துள்ளது. மேலும், இந்த குழுவில் அனைத்து வகை சமுதாயத்தினரும் இடம்பெறுவர் என்று குறிபிட்டுள்ள நீதிமன்றம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது யாருக்கும் முதல் மரியாதை கொடுக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதனிடையே, மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 11 பேரை சேர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.