இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை இன்று அவரது குடும்பத்தினர் உருக்கமாக சந்தித்து பேசினர்..!

1197

பலத்த பாதுகாப்புக்கு இடையே, இஸ்லாமாபாத்தில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை இன்று அவரது குடும்பத்தினர் உருக்கமாக சந்தித்து பேசினர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குள் ஊடுருவி, சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து, கடந்த மே மாதம், சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் மீதான தூக்குத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷன் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் இன்று சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் கடந்த 20-ஆம் தேதி விசா வழங்கியது. மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, குல்பூஷன் மனைவி மற்றும் தாயார், இந்திய துணைத்தூதர் ஜே.பி.சிங் ஆகியோர் இஸ்லாமாபாத் சென்றடைந்தனர். சந்திப்பு நடைபெறும் வெளியுறவு துறை அலுவலகத்தை சுற்றிலும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு ஒளிபரப்பு வாகனங்களுடன் குழுமியிருந்தனர். இந்த நிலையில், குல்பூஷன் ஜாதவ் அவரது மனைவி மற்றும் தாயாரை சந்தித்து பேசினார். இதனிடையே, ஜாதவ்வின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், விரைவில் இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.