மறைவு செய்திகேட்டு உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக அறிவிப்பு…

246

ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்து, அதிர்ச்சியில் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டும், அவர் மண் உலகைப் பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கட்சி சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுதவிர, ஜெயலலிதா மறைந்த துக்கத்தினால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றும், கைவிரலை வெட்டிக்கொண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, முழு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கட்சி சார்பில் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.