தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை..!

345

குட்கா முறைகேடு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, டி.ஜி.பி இல்லம் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். குறிப்பாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவின் வீட்டிலிருந்த ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் குட்கா விற்பனை செய்ய அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதனையடுத்து குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. களத்தில் குதித்த சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம் கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் 12 மணி நேரம் நடத்திய விசாரணையில் கிடைக்கபெற்ற தகவலின் பேரில் இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை முகப்பேரில் உள்ள தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் விவாத அனலை கிளம்ப்பியுள்ளது.