ஐஆர்சிடிசி நிலம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை : லாலு பிரசாத், மனைவி, மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

287

ஐஆர்சிடிசி நிலம் தொடர்பான முறைகேடு வழக்கில், லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியும், லாலு பிரசாத் யாதவை வரும் 6ஆம் தேதி ஆஜர் படுத்த வேண்டும் எனவும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாட்டுத்தீவன வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஐஆர்சிடிசி ஓட்டல்களை பராமரிக்க, பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக கையகப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி, பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை பரிசீலித்த பாட்டியாலா நீதிமன்றம், ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்தி, ஜாமீனில் செல்லலாம் என ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், லாலு பிரசாத் யாதவை வரும் 6ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என வாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.