இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாவாசிகளைக் கவர்ந்த இந்தோனேஷியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது. இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பல இடங்களில் கட்டிடங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. என்றாலும் கடல் அலைகள் எதிர்பார்த்த அளவிற்கு எழாததால் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.