இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்! நீதி ஆயோக் பரிசீலனை!!

299

புதுடெல்லி, ஜூலை. 27–
இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கலாம் என்று மத்தியக் கொள்கைக்குழு பரிசீலித்து வருகிறது.
டெல்லியில் நேற்று நீதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்வியை இந்திய மருத்துவக் கவுன்சில் சிறப்பாக நிர்வகிக்காதது, அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பிரதமரின் கூடுதல் தலைமைச் செயலர் பி.கே.மிஸ்ரா, நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், சுகாதாரத்துறை செயலாளர் பானு பிரதாப் சர்மா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது குறித்து ஏற்கனவே பலமுறை நீதி ஆயோக் சார்பில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்பில் மருத்துவத்துறையில் திறமையானவர்கள், அத்துறை வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் என்றும், நாட்டில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.