ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி | இந்தியாவுக்கு 106 ரன்கள் வெற்றி இலக்கு

222

இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, இந்திய அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசலாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 332 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்து சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 137 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதிகளவாக மேக்ஸ்வெல் மட்டும் 45 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியுள்ளது.