இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி..!

157

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது இரண்டாவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட்கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை தெறிக்கவிட்ட ஷிகர் தவான் தனது 16-வது சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஆடிய ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, விராட்கோலி இணைந்து களத்தில் ரன்களைக் குவித்தனர். ஹர்திக் பாண்டியா 48 ரன்னிலும், டோனி 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய விராட்கோலி 82 ரன்களைக் குவித்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 352 ரன்களை எடுத்தது.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடனமான இலக்குடன், ஆஸ்திரேலிய அணியின் சார்பில், டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 36 ரன்னிலும், டேவிட் வார்னர் 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் களமிறங்கிய உஸ்மான் கவாஜா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த ஸ்டிவன் ஸ்மித், அதிரடியாக விளையாடி 69 ரன்களை குவித்தார். பின்னர் களம் இறங்கிய வீரர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல்கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆடம் சாம்பா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதி வரை அலெக்ஸ் கேரி 55 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 50 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.