கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

204

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கடக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். இதுவரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் இன்று மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் நாளை மாலை பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும். கஜா புயல் சென்னைக்கு 540 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 640 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ., ஆகவும், சில சமயம் 110 கி.மீ., வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதி மேசாமடைந்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை புயல் கரையை கடக்க உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.