குடியரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடி ஏற்றினார்.

159

68-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வருகை தந்த பிரதமர் மோடி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் பங்கேற்பதற்காக குண்டு துளைக்காத காரில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வந்தார். அவருடன் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் முகமது பின் ஷேக்கும் ஒரே காரில் வந்தார். இரு தலைவர்களையும் புன்முறுவலோடு
பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகளை
அபுதாபி இளவரசருக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க தேசியக்கீதம் இசைக்க குடியரசுத்தலைவர் மூவர்ண தேசியக்கொடி ஏற்றினார்.

பின்னர், ராணுவத்தில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கினார். அசோக சக்ரா விருது அசாமைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த தேங்பங் தாதாவுக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின கலைநிகழ்ச்சிகளை குண்டு துளைக்காத முற்றிலும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் அமர்ந்து குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், அபுதாபி இளவரசர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.