இந்தியா-பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் மணிலாவில் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே-வுடன் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், தொழில் மேம்பாடு, பல்வறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இதனையடுத்து, இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில், தீவிரவாத ஒழிப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அதிபருடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா – பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே கலாச்சார தொடர்புகள் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.