இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது வெங்கையா நாயுடு பேச்சு!

261

சென்னை,ஜூலை.23–
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார்.
சென்னை தண்டையார்பேட்டையில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்–விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சிறப்பு மலரை வெளியிட்டு பேசியதாவது:–
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். மேலும் இந்த திட்டத்தினால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு ரூ.3770 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் 316 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 553 கி.மீ நீளத்திற்கு விரிவாக்க திட்டம் அமைய உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.