சுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..!

164

சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

72-வது சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில், விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை தலைமைச் செயலகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தை சுற்றி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்திற்குள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து, தமிழக முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.