இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா..!

465

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து பாலோ ஆன் ஆனது. இதன்படி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தநிலையில், நான்காம் நாளான இன்று பொறுப்பாக விளையாடும் என எதிர்பார்த்த இலங்கை அணி அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்தது. இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியினர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 386 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 7 விக்கெட்களும், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதன்படி, 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2-க்கு பூச்சியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.