அரசு மருத்துவக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

379

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவண்ணாமலையில் தேர்வுக்கூடம், மருத்துவ மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள் மற்றும், தேனி, மதுரை, நாகை, திருச்சி, கடலூர், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் காணொலி காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.பால்வளத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப பால் பதனிடும் தொழிற்சாலை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், நூலகக் கட்டடம், ஆராய்ச்சிக்கூடம், கருத்தரங்கக்கூடம் மற்றும் தியான மண்டபம் ஆகியவற்றையும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.