ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் !

261

தமிழத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கோவை, நெல்லை, மதுரையில் 5வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவையில், கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இளைஞர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இரவு பகல் பார்க்காமல் விடிய விடிய ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 4வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பீட்டாவை நாட்டை விட்டு விரட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள் பட்டாளம் தொடர்ந்து விடிய விடிய போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக உத்தரவாதத்தை மாநில அரசு அளிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கை. மேலும், ஜல்லிக்கட்டு எங்களின் பாரம்பரியம். அதை அழிக்க நினைக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் இளைஞர்கள்.