எம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..!

184

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி ஒருவர் ராஜபக்சே அணிக்கு தாவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #PresidentSirisena #PrimeMinisterRanilWickramasinghe #Rajapaksa

இலங்கையில் அதிபர் சிறிசேனா ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவீட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததை அடுத்து அங்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விக்கிரமசிங்கே மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 7ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் முன்னதாக, விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 உறுப்பினர்களும், ராஜபக்சே-சிறீசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும் இருந்தனர்.

இந்நிலையில், விக்கிரமசிங்கே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரை ராஜபக்சே தன்பக்கம் இழுத்துக் கொண்டார். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி வியாழேந்திரன், ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதனால் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்கு ராஜபக்சே குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.