ஐஜி மீதான பாலியல் புகார் – புதிய திருப்பம்

164

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஐ.ஜி. ஒருவர் மீது பெண் காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பகத்தில் கூடிய விசாகா கமிட்டி கூட்டத்தில், பெண் எஸ்.பி கூறிய புகார் மீது எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, நாளிதழ்களில் வெளி வந்த செய்தியை கொண்டு பாலியல் புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து, வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே, பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யைக் காப்பற்றவும், புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும் முதலமைச்சர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.ஜி. மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி இல்லை என்றும், அதில் உள்நோக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீமா தலைமையிலான விசாகா கமிட்டி, ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் விசாகா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.