இரட்டை இலை சின்னம் விவகாரம் | சசிகலா அணிக்கு தேர்தல் ஆணைய கெடு இன்றுடன் நிறைவு

233

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலா அணியினருக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டு காணப்படுகிறது. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா நடராஜன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையத்திடம் இருதரப்பினரும் முறையிட்டுள்ளனர். தங்கள் அணியே உண்மையான அதிமுக என்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மார்ச் 21 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. எனவே, சசிகலா அணி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.