ஐதராபாத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இருவரை தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, என்ஐஏ போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முகமது அப்துல் பாசித், முகமது அப்துல் குவாதீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும், நாட்டில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபட சதி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தவிர இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளைப் பரப்புவது, ஐஎஸ் அமைப்பில் மேலும் பலரைச் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளநிலையில், அவற்றில் இருந்து பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.